பதிவு செய்த நாள்
02
மார்
2024
02:03
சென்னை: கும்பகோணத்தை சுற்றிய நவகிரக தலங்களுக்கு, ஏப்ரல் 1 முதல் தினமும் சுற்றுலா பஸ்கள் இயக்கப்படும் என, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நவகிரக தலங்களுக்கு, ஒரே நாளில் ஒரே பஸ்சில் பயணம் செய்யும் வகையில், நவகிரக சிறப்பு பஸ்கள் இயக்கம், கடந்த 24ம் தேதி துவங்கப்பட்டது. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறன்று,கும்பகோணம் போக்குவரத்துக் கழகம் வாயிலாக பஸ்கள் இயக்கப்பட்டன. திங்களூர் சந்திரன் கோவில், ஆலங்குடி குரு பகவான், திருநாகேஸ்வரம் ராகு பகவான், சூரியனார் கோயில் சூரிய பகவான், கஞ்சனுார் சுக்கிரன் கோயில், வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு, பெரும்பள்ளம் கேது பகவான் தரிசனம், திருநள்ளாறு சனிபகவான் கோவிலுடன் தரிசனம் நிறைவடைகிறது. பயணக் கட்டணம், 750 ரூபாய். இந்த சுற்றுலா திட்டத்திற்கு பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், வரும் 7-ம் தேதி முதல் வாரந்தோறும் வியாழன் அன்றும் செல்லலாம் என, விரிவுப்படுத்தப்பட்டது. தற்போது, பக்தர்களின் வரவேற்பு மற்றும் கோரிக்கையை ஏற்று, வரும் ஏப்., 1 முதல் தினமும் நவகிரக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்த பஸ்சில் பயணிக்க tnstc செயலி அல்லது www.tnstc.in என்ற இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.