நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2024 01:03
திருநெல்வேலி; தெய்வத் திருமணங்கள் நிகழ்ந்த சிறப்பு மிகுந்த நாள் பங்குனி உத்திரம். பரமசிவன், பார்வதியை பங்குனி உத்திர நாளில் மணந்ததாக ஐதீகம் உள்ளது. பக்தனின் எமபயம் ஒழித்து முக்தி அளித்து ம்ருத்யுஞ்ஜய மூர்த்தியாக சிவபெருமான் அருள்பாலிக்கும் நெல்லையப்பர் கோயிலில் நடக்கும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பு மிகுந்தது. இத்திருவிழாக் காலத்தில் மட்டுமே கோயிலில் ஆத்மார்த்த பூஜைக்கு வைக்கப்பட்டிருக்கும் மிகச்சிறிய உடையவர்லிங்கம் கருவறையில் இருந்து வெளி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நேற்று சுவாமி சன்னதி உள்பிரகாரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா துவக்கத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. திருவிழா நாட்களில் மாலை 6.30மணிக்கு உற்சவர் மண்டபத்தில் உடையவர் லிங்கத்திற்கு அபிஷேக, ஆராதனை நடக்கிறது. 4ம் திருநாள், 18ம் தேதி காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் வேணுவனநாதர் தோன்றிய வரலாறு வாசிக்கும் நிகழ்வு, மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது. 10ம் திருநாள் 24ம் தேதி இரவு 7 மணிக்கு அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திர செங்கோல் விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி, பணியாளர்கள், பக்தர்கள் குழுவினர் செய்துள்ளனர். விழாவில் அறங்காவலர் சொனா.வெங்கடாசலம் உட்படஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.