நீச்சல் குளம் திறப்பு; உற்சாகத்துடன் நீராடியது மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2024 01:03
மயிலாடுதுறை; மயிலாடுதுறையின் அடையாளமாகவும் பொதுமக்களின் செல்லப்பிள்ளையாக திருவிழாக்களில் வளம் வரும் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தின் அபயாம்பிகை யானைக்கு 40 லட்சம் மதிப்பீட்டில் நீச்சல் குளம் தங்கும் அறை திறப்பு விழா நடைபெற்றது. நீச்சல் குளத்தில் துள்ளி குதித்து உருண்டு உற்சாக குளியலிட்டு ஷவர் பாத்தில் நீராடிய காட்சிகளை பொதுமக்கள் ஆர்வமுடன் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தேவாரப் பாடல்கள் பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்திற்கு 1972 ஆம் ஆண்டு 5 வயது குட்டியாக அபயாம்பிகை யானை அழைத்துவரப்பட்டது. மூன்று தலைமுறைகளாக யானை பாகன்கள் குடும்பத்தினர் யானையை பராமரித்து வருகின்றனர். மயிலாடுதுறை மக்களின் செல்ல பிள்ளையாக மயிலாடுதுறை அடையாளங்களில் ஒன்றான இந்த யானை மயிலாடுதுறையில் நடைபெறும் அனைத்து கோயில் விழாக்களில் முன்னே செல்வது வழக்கம். அபயாம்பிகை யானைக்கு 56 வயதாகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி மாவட்ட வளர்ப்பு யானைகள் மேலாண்மை திட்டம் 2011ன் கீழ் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் யானை தங்கும் அறை 28 அடி உயரம் 30 அடி அகலம் 25 அடி நீளத்திலும் 15 லட்சம் மதிப்பீட்டில் யானை குளிப்பதற்கு ஷவர் பாத்துடன் உள்ள பிரம்மாண்ட நீச்சல் குளம் கோயில் நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டது. யானை தங்கும் அறை நீச்சல் குளம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. சிறப்பு ஹோமங்கள் கோபூஜை, கஜபூஜை, செய்யப்பட்டு புதிதாக கட்டப்பட்ட யானைக் கோட்டகையை ஆலயத்தின் தலைமை அர்ச்சகர் சுவாமிநாத சிவாச்சாரியார் திறந்து வைத்தார். தொடர்ந்து யானை அபயாம்பிகை உள்ளே சென்று யானைக்கு சிறப்பு பூஜைகள் மகாதீபாரதனை செய்யப்பட்டது. தொடர்ந்து நீச்சல் குளத்தில் அபயாம்பிகை யானை முதல் முறையாக உற்சாகத்துடன் நீராடியது. நீச்சல் குளத்தில் இறங்கிய யானை துள்ளி குதித்து மகிழ்ச்சியுடன் உருண்டு புரண்டு உற்சாகமாக பிளிறியவாறு மகிழ்ச்சியுடன் ஆனந்த் குளியல் இட்டது. ஷவர் பாத்திலும் உற்சாகம் பொங்க யானை குளித்தது பொது மக்களை பரவசப்படுத்தியது. யானை குளிக்கும் காட்சிகளை ஆர்வமுடன் பொதுமக்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர்.