கடும் வெயிலில் மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் ; தண்ணீர் ஊற்றி குளிர்வித்த முஸ்லிம்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2024 03:03
காரைக்குடி; காரைக்குடியில், முத்துமாரியம்மனுக்கு பால்குடம், தீச்சட்டி எடுத்துச் சென்ற பக்தர்களை தண்ணீர் ஊற்றி குளிர்வித்த முஸ்லிம்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவின் முக்கிய திருவிழாவான பால்குட திருவிழா நடந்தது. ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, காவடி எடுத்துச் சென்றனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களது நேர்த்தி கடனை பக்தர்கள் செலுத்தினர். காரைக்குடி பஸ்ட் பீட் அருகேயுள்ள பஜார் பள்ளிவாசல் சாலை வழியாக, பக்தர்கள் நடந்து செல்வது வழக்கம். இன்று வழக்கத்தை விட வெயில் அதிகளவில் இருந்தது. இந்நிலையில் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கத்தை தணித்திட முஸ்லிம்கள் பள்ளிவாசலில் இருந்து குழாய் மூலம் பக்தர்கள் மீதும், சாலை மீதும் தண்ணீர் பீய்ச்சி அடித்து பக்தர்களை குளிர்வித்தனர். மத வேறுபாடு பாராமல் மாரியம்மன் கோயில் பக்தர்களை குளிர்வித்த மனிதநேயமிக்க மனிதர்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.