திருப்புவனத்தில் பங்குனி திருவிழா; திரளான பக்தர்கள் தேர் இழுத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2024 03:03
திருப்புவனம்; திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தர நாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி புஷ்பவனேஷ்வரரும் சவுத்தரநாயகி அம்மனும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. சிறப்பு பூஜைக்கு பின் தேருக்கு தீபாராதனை காட்டப்பட்டு தேர் நிலையை விட்டு பக்தர்களின் ஓம் நமச்சிவாயா என்ற கோஷத்துடன் கிளம்பியது. நான்கு ரத வீதிகளிலும் பெண்கள் வாசல் தெளித்து கோலமிட்டு அம்மனையும் சுவாமியையும் வரவேற்றனர். நான்கு ரத வீதிகளிலும் பக்தர்களுக்கு நீர்மோர், சர்பத், அன்னதானம் வழங்கப்பட்டது. காலை 9:30 மணிக்கு நிலையை விட்டு கிளம்பிய தேர் காலை 11:30 மணிக்கு வந்தடைந்தது. தேர் நிலையை வந்தடைந்த உடன் பக்தர்கள் காய்கறிகள், பழங்களை சூறையிட்டனர். தேர் நிலையை வந்தடைந்த பின் அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நாளை (24ம் தேதி) தீர்த்தவாரியுடன் பங்குனி திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேலுச்சாமி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு மானாமதுரை டி.எஸ்.பி., கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.