பதிவு செய்த நாள்
25
மார்
2024
10:03
திட்டக்குடி; திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள நந்தவன பாலகுமார சுப்பிரமணியருக்கு பங்குனி உத்திரத்தையொட்டி காவடித்திருவிழா நடந்தது.
திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவிலில் கடந்த மார்ச் 15ம் தேதி, பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச் 21ம் தேதி, சுவாமி திருக்கல்யாண வைபவம் நடந்தது. 23ம் தேதி, பங்குனி உத்திர தேர் திருவிழா நடந்தது. விநாயகர், அசனாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி, சோமாஸ்கந்தர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் தனித்தனி தேர்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து நேற்று, வைத்தியநாத சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள நந்தவன பாலகுமார சுப்பிரமணியருக்கு காவடித்திருவிழா நடந்தது. அகில பாரத சிவனடியார்கள் திருக்கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமையில் பால், பன்னீர், சந்தனம், புஷ்ப காவடிகள் எடுத்துவரப்பட்டு, சுவாமிக்கு மஹாபிஷேகம் நடந்தது. காவடித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொழிலதிபர் பெரியதம்பி, மஹா சித்தர்கள் டிரஸ்ட் ரோகிணிராஜ்குமார், அருந்ததி வசிஷ்டர் கோமாதா பூஜை குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.