திருக்கோஷ்டியூர் வடக்கு வாசல் செல்வி அம்பாள் கோயிலில் பூச்சொரிதல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2024 04:04
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் வடக்கு வாசல் செல்வி அம்பாள் கோயிலில் 33ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடந்தது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பூச்சொரிதல் விழா பத்து நாட்கள் நடைபெறும். இன்று காலை காப்புக்கட்டி விழா துவங்கியது. பக்தர்கள் அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் நடத்தி பூச்சொரிதல் விழா நடந்தது. மின் ரதத்தில் அம்மன் பவனி நடந்தது. திருக்கோஷ்டியூர் மேலத்தெரு இசை வெள்ளாளர் சமுதாயத்தினர் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து பல பகுதிகளிலிருந்தும் திரளாக பெண்கள் பூத்தட்டுக்களுடன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பக்தர்கள் சமர்ப்பித்த பூக்களால் அம்மனுக்கு அர்ச்சனைகள் நடந்தது. நிறைவாக அம்மனுக்கு மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் எடுக்க சன்னதியில் காப்பு கட்டினர். ஏப்.,12 காலையில் பக்தர்கள் பால் குடம் எடுக்கின்றனர். மாலையில் அக்னிசட்டி எடுக்கின்றனர். இரவில் அம்மன் திருவீதி உலாவும், முளைப்பாரி விழாவும் நடைபெறும். ஏப்.,13 காலை 11:00 மணிக்கு அம்மன் தேரோட்டம் நடைபெறும். மதியம் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெறும். ஏற்பாட்டினை மேலத்தெரு இளைஞர் மன்றத்தினர் செய்தனர்.