பதிவு செய்த நாள்
06
ஏப்
2024
11:04
விக்கிரமசிங்கபுரம்: பாபநாசம் பாபவிநாசர் கோயிலில் சித்திரை விசு திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது. பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபவிநாசர் கோயிலின் சித்திரை விசு திருவிழா வரும் 14ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. காலை சுமார் 9.45 மணிக்கு கொடியேற்றம், கொடிமரத்திற்கு சிறப்பு ஆராதனை நடந்தது. விழாவில் கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவர் செல்வசுரேஷ் பெருமாள், கவுன்சிலர்கள் விக்னேஷ், சாரதா, விக்கிரமசிங்கபுரம் பிள்ளையன்கட்டளை திருவாவடுதுறை ஆதீன கண்காணிப்பாளர் சொரிமுத்து, நகராட்சி முன்னாள் துணை தலைவர் கணேசபெருமாள், தொழிலதிபர் அருண் உட்பட அனைத்து சமுதாய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருவிழாவின் முதல் நாளான நேற்று மாலை சுமார் 6 மணிக்கு சுவாமி மண்டகப்படிக்கு எழுந்தருளல், சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது. இன்று (6ம் தேதி) காலை ஏக சிம்மாசனம் இரவு சுமார் 9 மணிக்கு சுவாமி, அம்பாள் கைலாச பருவதம் வாகனங்களில் வீதி உலா நடக்கிறது. 3ம் திருநாளான நாளை (7ம் தேதி) காலை 7.45 மணிக்கு சுவாமி அழைப்பு, 10 மணிக்கு பாபநாசம் சேனைத்தலைவர் மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு அலங்காரம், தீபாராதனை, 9 மணிக்கு சிம்ம வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடக்கிறது.