பதிவு செய்த நாள்
06
ஏப்
2024
12:04
அம்பாசமுத்திரம்; அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி கோயில்களில் பங்குனி பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்பாசமுத்திரத்தில் வரும் 12ம் தேதி அகஸ்தியருக்கு சிவபெருமான் திருமண காட்சி வைபவம், 13ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
காசிநாத சுவாமி கோயில்: அம்பாசமுத்திரம் மரகதாம்பிகை சமேத காசிநாத சுவாமி கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. விழா நாட்களில் நாள்தோறும் காலை, இரவில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். 9ம் திருநாளான வரும் 13ம் தேதி தேரோட்டமும், 14ம் தேதி தீர்த்தவாரியும் நடக்கிறது.
அகஸ்தீஸ்வரர் கோயில்: அம்பாசமுத்திரம் உலோபாமுத்திரை அம்பாள் சமேத அகஸ்தீஸ்வரர் கோயிலில் சுவாமி, அம்பாள், கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர், கொடி பட்டம் கோயிலை சுற்றி வந்து மேள தாளங்கள் முழங்க
கொடியேற்றப்பட்டது. 8ம் திருநாளான வரும் 12ம் தேதி பகலில் கும்பிடு நமஸ்காரம், அங்கப்பிரதட்சணமும், இரவில் அகஸ்தியருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சியளிக்கும் வைபவமும் நடக்கிறது. 14ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது.
கல்லிடைக்குறிச்சி: கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வரர் கோயிலில் சுவாமி, அம்பாள், கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகளை தொடர்ந்து கொடியேற்றப்பட்டது. 7ம் திருவிழாவான வரும் 11ம் தேதி காலையில் அங்கப் பிரதட்சணம், இரவில் அகஸ்தியருக்கு முருக பெருமான் உபதேசம் செய்யும் வைபவம் நடக்கிறது. கொடியேற்ற நிகழ்வுகளில், சமய அறநிலையத் துறையினர், அறங்காவலர்கள், மண்டகப்படிதாரர்கள், கட்டளைதாரர்கள், ஆன்மீக அன்பர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.