திருப்பதியில் உகாதி ஆஸ்தானம்; மலர் அலங்காரத்தில் ஜொலித்த திருமலை கோவில்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2024 01:04
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான தலைவர் ஸ்ரீ பூமன கருணாகர் ரெட்டி மற்றும் தர்ம ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தெலுங்கு நாட்காட்டி மற்றும் பஞ்சாங்கத்தின்படி அமாவாசையின் மறுநாள் புதிய மாதம் பிறக்கிறது. எனவே, பங்குனி மாத அமாவாசையின் மறுநாள் ஆண்டுதோறும் தெலுங்கு வருட பிறப்பு கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலங்களில் யுகாதி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருமலை ஏழுமலையான் கோவிலிலும் தெலுங்கு வருட பிறப்பு சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலை ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ மலையப்பஸ்வாமி, விஷ்வக்சேனர் அலங்காரத்துடன் விமான பிரகாரம், கொடிமரத்தை சுற்றி ஊர்வலமாக கோவிலுக்குள் சென்றனர். தங்க மண்டபத்தில் கருடாழ்வார் எதிரே சர்வபூபால வாகனத்தில் உற்சவர்கள் வீற்றிருந்தனர். உற்சவர்களுக்கு அடுத்துள்ள மற்றொரு பீடத்தில் சேனாதிபதியான விஷ்வக்சேனர் வீற்றிருந்தார். அதன்பின் ஏழுமலையானுக்கும், உற்சவமூர்த்திக்கும் புது வஸ்திரம் அணிவித்தனர். பின்னர் பஞ்சாங்க படனம் நடைபெற்றது. பின்னர் நெய்வேத்தியம், தீப, துாப ஆராதனைகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் டிஎல்ஓ வீரராஜு, எஸ்இ-2 ஜெகதீஸ்வர் ரெட்டி, கோயில் துணை இஓ லோகநாதம், விஜிஓ நந்த கிஷோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.