கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயிலில் 1359 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2024 05:04
நாகர்கோவில்; கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் நடைபெற்ற தூக்கத் திருவிழாவில் 1359 குழந்தைகள் தூக்க மரத்தில் ஏற்றப்பட்டு தூக்க நேர்த்திக்கடன் நிறைவு செய்யப்பட்டது.
தமிழக - கேரள எல்லையான கொல்லங்கோட்டில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோயிலில் தூக்க திருவிழா கடந்தஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.குழந்தைகள் பிறக்கவும், பிறந்த குழந்தைகள் ஆரோக்கியமாக வாழவும் இந்த கோயிலில் தங்கள் குழந்தைகளை தூக்க மரத்தில் ஏற்றுவதாக பெற்றோர்கள் வேண்டுதல் நடத்துகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு தூக்க மரத்தில் ஏற்றுவதற்காக 1359 குழந்தைகள் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை வழக்கமான பூஜைகள் முடிந்து அதிகாலை 4:30 க்கு குழந்தைகளை கையில் ஏந்தி தூக்க மரத்தில் தொங்கும் தூக்க காரர்கள் அம்மன் சன்னதியில் முட்டுக்குத்தி நமஸ்காரம் செய்தனர்.தொடர்ந்து அம்மன் பச்சை பந்தலுக்கு எழுந்தருளினார். காலை 6:20 க்கு தூக்க நேர்த்தி கடன் தொடங்கியது. முதலில் முதல் தூக்க வண்டி அம்மன் பெயரில் நடைபெற்றது. தொடர்ந்து குழந்தைகளுக்கான நேர்த்தி கடன் தொடங்கியது. 41 அடி உயரம் கொண்ட தூக்க மரத்தில் கட்டப்பட்டுள்ள தூக்கவில்லில் நான்கு தூக்கக்காரர்களை துணிகளால் இடுப்பில் கட்டிய பின்னர் அவர்கள் கையில் தலா ஒரு குழந்தைகள் வீதம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து தேர் போன்ற தூக்க வண்டியை பக்தர்கள் கோயிலை சுற்றி இழுத்து வருவர். ஒருமுறை கோயிலை சுற்றி வந்ததும் நான்கு குழந்தைகளின் தூக்க நேர்த்தி கடன் நிறைவு பெறும். மொத்தம் 341 முறை இந்த தூக்கவண்டி கோயிலை சுற்றி வந்தது. தொடர்ந்து தேவி ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.