பதிவு செய்த நாள்
15
ஏப்
2024
11:04
திருவண்ணாமலை; பாரம்பரிய கலையை வளர்க்கும் நோக்கிலும், உலக நன்மைக்காகவும், நர்த்தனன் பரதநாட்டிய கலைஞர்கள் குழுவினர், திருவண்ணாமலையில் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் வந்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. தமிழ் புத்தாண்டான, குரோதி வருடபிறப்பையொட்டி, அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மன் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, விநாயகருக்கு தங்க கவசம், அருணாசலேஸ்வரர் மூலவருக்கு தங்க நாகாபரணம், வெள்ளி ஆவுடையார் சாத்தப்பட்டது. உண்ணாமுலையம்மனுக்கு வைர கிரீடம், தங்கக்காசு மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. தமிழ் மாத சித்திரை வருட பிறப்பு என்பதால், அதிகாலை முதலே கோவிலிற்கு பக்தர்கள் வருகை தந்து, சுவாமியை தரிசனம் செய்து கிரிவலம் சென்றனர். கோவில் சிவாச்சாரியார்கள், தங்க கொடிமரம் அருகிலுள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து பஞ்சாங்கம் வாசித்தனர். கோவிலின், 3ம் பிரகாரத்தில் தங்கத்தேர் இழுத்து பக்தர்கள் வழிபட்டனர். பாரம்பரிய கலையை வளர்க்கும் நோக்கிலும், உலக நன்மைக்காகவும், நர்த்தனன் பரதநாட்டிய கலைஞர்கள் குழுவினர், திருவண்ணாமலையில் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் வந்தனர்.