பதிவு செய்த நாள்
16
ஏப்
2024
08:04
திருநெல்வேலி; தச்சநல்லுார் சிவன் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் நடந்தது. தச்சநல்லூர் காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 8ம் திருநாளில் நடராஜர் வெள்ளைசாத்தி பச்சைசாத்தி சப்பர வீதியுலா, முருகர் பரிவேட்டை நிகழ்வு, கங்காளநாதர் சப்பர வீதியுலா, தேர் கடாட்சம் வீதியுலா நடந்தது. 9ம் திருநாளான நேற்று காலைசுவாமி, அம்பாளுக்கு வருஷாபிஷேகவிழா நடந்தது. பின்னர் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினர். தேரோட்டம் துவங்கி வீதிகளில் வலம் வந்தது. சுற்றுப்பகுதி மக்கள் திரளாகக்கலந்து கொண்டு தேர் இழுத்தனர். அன்னதானம் நடந்தது. இரவில் சுவாமி, அம்பாள் பல்லக்கு சப்பர வீதியுலா நடந்தது. 10ம் திருநாளான இன்று காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுடன் தாமிரபரணியில் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு பைரவர் பூஜைநடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தங்கசுதா, ஆய்வாளர் செல்வி, அறங்காவலர் குழுத் தலைவர் இசக்கியப்பன், உறுப்பினர்கள் மணிகண்டபிரபு, இந்திராணி, பணியாளர்கள், உபயதாரர்கள், பக்தர்கள் செய்துள்ளனர்.