பதிவு செய்த நாள்
18
ஏப்
2024
03:04
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, அரசாளும் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நாளை நடக்கிறது. மதுரையில், நாளை முதல் ஆவணி மாதம் வரை மீனாட்சி ஆட்சி நடக்கும் என்பது ஐதீகம். இதன் பிறகு, சொக்கநாதருக்கு பட்டாபிஷேகம் நடக்கும். மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா ஏப்., 12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் அம்மன், சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். நேற்று தங்கச்சப்பரத்திலும், தங்கம், வெள்ளி ரிஷப வாகனத்திலும் உலா வந்தனர். திருவிழாவின் எட்டாம் நாளான நாளை இரவு 7:35 மணி முதல் 7:59 மணிக்குள் அம்மன் சன்னிதி ஆறுகால் பீடத்தில், அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அம்மனிடம் தக்கார் ருக்மணி செங்கோல் பெற்று இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் அம்மனிடம் சேர்க்கிறார். இதைதொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மன் வீதி உலா வருகிறார். ஏப்., 20, திருவிழாவின் ஒன்பதாம் நாளன்று இரவு, அம்மன் இந்திர விமானத்தில் திக்குவிஜயம் செல்கிறார். ஏப்., 21 காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலா வருகிறார். ஏப்., 22 காலை தேரோட்டம் நடக்கிறது.