பதிவு செய்த நாள்
22
ஏப்
2024
07:04
அவிநாசி;அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பெரிய தேரோட்டம், ஓம் நமசிவாய கோஷம் விண்ணதிர நேற்று கோலாகலமாக நடந்தது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது பக்தர்கள் ஏராளமானோர் திரண்டனர்.
கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதும், சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்றதுமான தலம், திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள ஸ்ரீகருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில். தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேராக, இக்கோவில் தேர் விளங்குகிறது. இந்தாண்டு சித்திரை தேர்த்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்த நிகழ்ச்சி கடந்த 18ம் தேதி நடந்தது. கடந்த 19ம் தேதி கற்பகவிருட்சம் காட்சி, திருக்கல்யாணம், வெள்ளை யானை வாகனத்தில் ஸ்ரீ ஆனந்தவல்லி சந்திரசேகரப் பெருமான் காட்சியளித்தார். நேற்று பெரிய தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. தேரில் சோமாஸ்கந்தர் எழுந்தருளினார்.
காலை 9:50 மணியளவில் பெரிய தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மதியம் 12:06 மணியளவில் தேர் மேற்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டது. இன்று மீண்டும் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி வழியாக மீண்டும் தேர் நிலை நிறுத்தப்படும். கடும் வெயில் பாதங்களை சுட்டெரித்த போதிலும், நீண்ட நேரம் காத்திருந்து, தேர் ரத வீதிகளில் ஆடி அசைந்தவாறு வருவதை கண்ட பக்தர்கள் ஏராளமானோர், அரோகரா... ஓம் நமசிவாயா என விண்ணதிர கோஷம் எழுப்பி பக்திப்பெருக்குடன் மனம் குளிர்ந்தனர். சரவணம்பட்டி கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கூனம்பட்டி ஆதீனம் ராஜ சரவண மாணிக்கவாசக ஸ்வாமிகள், அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள், அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், கோவில் செயல் அலுவலர்(பொறுப்பு) சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காலை அம்மன் தேர் எனப்படும் சின்ன தேர் வடம் பிடித்து இழுத்து நிலை நிறுத்தப்படும்.