பதிவு செய்த நாள்
22
ஏப்
2024
07:04
வாரணாசி: தமிழக பக்தர்கள் தங்குவதற்காக, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில், ஸ்ரீகாசி நாட்டுக்கோட்டை நகர சத்திர மேலாண்மை கமிட்டி கட்டவுள்ளது. இதற்கான அடிக்கல் நேற்று(ஏப்.,21) நாட்டப்பட்டது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
ஹிந்துக்களின் புனித தலமான வாரணாசியில், நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினருக்கு சொந்தமான சத்திரம் உள்ளது. 1813-ல் கட்டப்பட்ட இந்த சத்திரத்தில், 210 ஆண்டுகளாக, தமிழக பக்தர்கள் தங்கி, காசி விஸ்வநாதரை தரிசித்து செல்கின்றனர். தற்போது, இந்த சத்திரத்தில் ஒரே நேரத்தில், 620 பக்தர்கள் தங்கும் வசதி உள்ளது. இந்நிலையில், சிக்ரா என்ற பகுதியில், ஆக்கிரமிப்பில் இருந்த 240 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை, 2022ல் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மீட்டு கொடுத்துள்ளார். அங்கு, 100 அறைகளுடன், 10 மாடிகள் கொண்ட புதிய தங்குமிடம் கட்டப்படும் என, நாட்டுக்கோட்டை நகர சத்திர மேலாண்மை கமிட்டி அறிவித்திருந்தது. இந்நிலையில், அதற்கான அடிக்கல் நேற்று நாட்டப்பட்டது. இதில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஸ்பிக் குழுமங்களில் தலைவர் முத்தையா, அபிராமி மெகா மாலின் சேர்மேன் அபிராமி இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.