பதிவு செய்த நாள்
22
ஏப்
2024
12:04
கோவை; கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. தென் திருகைலாயம் என்று அழைக்கப்படும் இக்கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். வெள்ளியங்கிரி மலையில் ஏழு மலையை கடந்து சென்று, அங்கிருக்கும் சுயம்பு லிங்கத்தை தரிசித்து செல்கின்றனர். வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர்கள் 7 பேர், 2 மாதங்களில் உயிரிழந்ததை தொடர்ந்து வனத்துறை பக்தர்களுக்காக சில கட்டுபாடுகளை அறிவித்துள்ளது. இதில் இருதய நோய், உயர் ரத்த அழுத்தம், மூச்சுத்திணறல், உடல் பருமன், நீரிழிவு நோய் இருப்பவர்கள் மலையேறக்கூடாது. வயதில் மூத்தவர்கள், உடல் நிலை பாதித்தவர்கள், கொரோனா பாதித்து தீவிர சிகிச்சையில் இருந்தவர்களும் மலை ஏறக்கூடாது. மலைக்கு செல்வோர் அனைவரும் முழு உடல் பரிசோதனை செய்தபிறகே செல்ல வேண்டும்; குழுவாக மட்டுமே செல்ல வேண்டும் எனக்கூறியுள்ளது. தற்போது சித்ரா பவுர்ணமிக்கு வரும் பக்தர்களை கண்காணிக்கவும், அவசர காலங்களில், அவர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்லவும், டிரோன்களை பயன்படுத்ததிட்டமிடப்பட்டுள்ளது.