திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2024 12:04
மயிலாடுதுறை; தரங்கம்பாடி அருகே உள்ள உலக புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலய சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ்பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்ததால் அட்ட வீரட்ட தளங்கள் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. தேவாரப் பாடல் பெற்ற இந்த கோவிலின் சித்திரை வசந்த உற்சவம் கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8ம் நாள் திருவிழாவான நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவிலில் இருந்து அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி பஞ்ச மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருள சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குரு மகா சன்னிதானம் முன்னிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுக்க நான்கு மாட வீதிகளையும் வளம் வந்த தேர் நிலையை அடைந்தது. சித்திரை தேர் திருவிழாவில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மற்றும் வெளி மாநில பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.