சூலூர் கோவில்களில் பூச்சாட்டு திருவிழா; பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2024 05:04
சூலூர்; சூலூர் வட்டாரத்தில் அம்மன் கோவில்களில் நடந்த பூச்சாட்டு பொங்கல் விழாவில், பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர்.
சூலூர் அடுத்த குமாரபாளையம் மாகாளியம்மன் கோவில், சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த, 20 ம்தேதி கம்பம் நடப்பட்டது. பக்தர்கள் தினமும் கம்பம் சுற்றி ஆடினர். நேற்று இரவு அம்மை அழைத்தல் நடந்தது. இன்று காலை, 5:00 மணிக்கு பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். க.ராயர்பாளையம் வேலவன் காவடி குழுவின் காவடி ஆட்டமும், ஜமாப் இசை நிகழ்ச்சியும் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல், கணியூர் ஊராட்சி குமார் நகர் முத்துமாரியம்மன் கோவிலில் மூன்றாம் ஆண்டு சித்திரை திருவிழா நேற்று நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சோளக்காட்டுபாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் பூச்சாட்டு பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. நேற்று முன்தினம் அம்மை அழைத்தல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். இன்று மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.