பதிவு செய்த நாள்
25
ஏப்
2024
02:04
அரியலூர்: அரியலூர் அருகே கல்லங்குறிச்சியில் கலியபெருமாள் கோவில் எனப்படும் கலியுக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, சேலம், விழுப்புரம், கடலூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் உள்பட, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, பல லட்சம் மக்களின் பிரார்த்தனை தலமாக இக்கோவில் விளங்குகிறது. சிறப்பு பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோவில் ஆண்டு பெருந்திருவிழா, கடந்த, 17ம் தேதி ஸ்ரீராமநவமியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஐந்தாம் நாள் திருவிழாவான வெள்ளி கருட சேவையை தொடர்ந்து, ஏழாம் நாள் திருவிழாவான திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று 25ம் தேதி வியாழக்கிழமை நடைபெற்றது. காலை துவங்கி நான்கு வீதிகள் வழியாக நடந்த தேரோட்டம் முற்பகலில் தேரடியை அடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு, சேலம், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, ஆத்தூர், பெரம்பலூர், துறையூர், ஜெயங்கொண்டம், திட்டக்குடி, விருத்தாஜலம், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்தும், 100க்கும் மேற்பட்ட அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.