பெற்றோர் திருக்கல்யாணத்தை முடித்து திருப்பரங்குன்றம் திரும்பிய முருகப் பெருமான்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2024 02:04
திருப்பரங்குன்றம்; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பங்கேற்ற சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுடன் பூ பல்லக்கிலும், தாரை வார்த்துக் கொடுத்த பவளக்கனிவாய் பெருமாள் சிம்மாசனத்திலும் நேற்று திருப்பரங்குன்றம் கோயிலுக்கு திரும்பினர். பெற்றோர் திருக்கல்யாணத்தில் பங்கேற்க தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாளுடன் பாண்டியராஜாவாக சுப்பிரமணிய சுவாமி ஏப். 20ல் திருப்பரங்குன்றத்திலிருந்து புறப்பாடாகினர். திருக்கல்யாணம் முடிந்து, மதுரை சுவாமிகளுடன் திருப்பரங்குன்றம் சுவாமிகள் வீதி உலா நிகழ்ச்சிகளில் அருள்பாலித்தனர். நேற்று முன்தினம் மாலையில் மதுரை சுவாமிகளிடம் திருப்பரங்குன்றம் சுவாமிகள் விடைபெறும் நிகழ்ச்சி முடிந்து நேற்று காலை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து புறப்பாடாகி தெற்கு ஆவணி மூல வீதியிலுள்ள மண்டபத்தில் எழுந்தருளினர். பூ பல்லக்கு: மாலையில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜை முடிந்து சர்வ அலங்காரத்தில் பூ பல்லக்கில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடாகி ஆவணி மூல வீதிகளில் வலம் சென்று அம்மன் சன்னதியில் எழுந்தருளினர். மதுரை கோயிலில் எழுந்தருளியிருந்த பவளக்கனிவாய் பெருமாள் புறப்பாடாகி சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வந்தனர்.