பதிவு செய்த நாள்
25
ஏப்
2024
03:04
அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலில், சித்திரை பிரமோற்சவம், இம்மாதம் 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 3-வது நாளன்று, அதிகார நந்தி சேவையில், 63 நாயன்மார்கள் வீதி உலாவும், 5-வது நாள் திருக்கல்யாண உற்சவமும் நடந்தன. தொடர்ந்து, 7வது நாள், விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடந்தது. 36 அடி உயரமுள்ள பெரிய தேரில், ஆட்சீஸ்வரர், இளங்கிளியம்மன் எழுந்தருளி அருள்பாலித்தனர். பின், 9ம் நாள் நிகழ்வாக, ஆட்சீஸ்வரர் -- இளங்கிளியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. நேற்று, 11ம் நாள் நிகழ்வாக, சஞ்சீவி மலையும், மேரு மலையும் இணையும் இரட்டைமலை சந்திப்பான அரப்பேடு பகுதியில், இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருமண கோலத்தில் காட்சி அளித்தார். அப்போது, அம்மை, அப்பனை முருகன் மூன்று முறை வலம் வந்து வணங்கினார். பின், தாந்தோன்றீஸ்வரர் சுவாமி கோவிலில் தவம் செய்யும் அகஸ்தியர், சாகர், சனகர், சனந்தனர், சனத்குமாரர் ஆகியோர்களுக்கு திருமண கோலத்தில் காட்சியளித்தார். இதில், இரட்டைமலை சந்திப்பில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, முருகனையும், ஆட்சீஸ்வரர்- - இளங்கிளி அம்மனையும் வழிபட்டு சென்றனர்.