பதிவு செய்த நாள்
25
ஏப்
2024
04:04
காஞ்சிபுரம்: கூழமந்தலில் வரும் 27ம் தேதி சித்திரை பெருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. இதில் கூழமந்தல், நட்சத்திர விருட்ச விநாயகர் மூஷிக வாகனத்திலும், கங்கை கொண்ட சோழீஸ்வரர் ரிஷப வாகனத்திலும், பேசும் பெருமாள் கருட வாகனத்திலும் எழுந்தருளி கூழமந்தல் மைதானத்தில் ஒரே இடத்தில் சங்கமிக்கின்றனர்.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, கூழமந்தல் மைதானத்தில் சித்திரை பெருவிழா வரும் 27ம் தேதி, இரவு 7:00 மணி முதல், மறுநாள் அதிகாலை 5:00 மணி வரை நடைபெறுகிறது. இவ்விழாவையொட்டி, இக்கிராமத்தில் உள்ள நட்சத்திர விருட்ச விநாயகர், விசாலாட்சி சமேத கங்கைகொண்ட சோழீஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பேசும் பெருமாள் ஆகிய மூலவர்களுக்கு காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை 3:00 மணிக்கு மேல் நட்சத்திர விருட்ச விநாயகர் மூஷிக வாகனத்திலும், விசாலாட்சி சமேத கங்கைகொண்ட சோழீஸ்வரர் ரிஷப வாகனத்திலும், ஸ்ரீதேவி பூதேவி சமேத பேசும் பெருமாள் கருட வாகனத்திலும் எழுந்தருளி, கோவிலில் இருந்து வீதியுலாவாக சித்திரை பெருவிழா நடைபெறும் மைதானத்தில் தங்களது வாகனங்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இரவு 7:00 மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு 16 வகையான நறுமண பொருட்களால் விசேஷ அபிஷேகமும், மலர்களால் சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து, விசாலாட்சி சமேத கங்கைகொண்ட சோழீஸ்வரர், ஸ்ரீதேவி பூதேவி சமேத பேசும் பெருமாள் ஆகியோரை, நட்சத்திர விருட்ச விநாயகர், மூன்று முறை வலம் வந்து வணங்கி, ஆசீர்வாதம் பெற்று கஜமுக அசுரனை வதம் செய்யும் உன்னத நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து, உலகத்தை காக்க மும்மூர்த்திகளுக்கு அருளுரை வழங்கும் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெறுகிறது. விழாவின் நிறைவாக மகா தீபாராதனை, வீதியுலா நடைபெற உள்ளது.