பதிவு செய்த நாள்
02
நவ
2012
10:11
சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், ஊழியர்களின் வருகை பதிவை கண்காணிக்க, கட்டளைதாரர், "பயோ மெட்ரிக் கருவி வழங்கியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சேலம் செரி ரோட்டில், பழமை வாய்ந்த சுகவனேஸ்வரர் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், கணிசமான வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. கோவிலில், அர்ச்சகர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட, 40 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கோவில் அலுவலகத்தில், இவர்களின் தினசரி வருகைப்பதிவு பதிவு செய்யப்படுகிறது. ராதாகிருஷ்ணன் என்பவர், சுகவனேஸ்வரர் கோவில் அறக்கட்டளைதாரராக உள்ளார். கோவிலில் பணியாற்றும் ஊழியர்களின், வருகை பதிவை கண்காணிப்பதற்காக, கோவிலுக்கு, பயோ மெட்ரிக் கருவியை வழங்க முடிவு செய்தார். நேற்று காலை, சுகவனேஸ்வரர் கோவிலுக்கு சென்ற ராதாகிருஷ்ணன், உதவி கமிஷனர் அலுவலகத்தில், பயோ மெட்ரிக் இயந்திரத்தை, கோவில் அலுவலர்கள் உதவியுடன் பொருத்தினர். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில், ஊழியர்களின் வருகை பதிவு உள்ளிட்ட, அன்றாட அலுவல் நடவடிக்கைகளை கண்காணிப்பது தொடர்பாக, சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்த முறையான உத்தரவு வந்த பிறகே, பயோ மெட்ரிக் முறை பின்பற்றப்பட வேண்டும். ஆனால், கட்டளைதாரர் வழங்கிய பயோ மெட்ரிக் கருவியை, கோவில் நிர்வாகம் பொருத்தியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, சேலம் மண்டல இந்து சமய அறநிலையத் துறை இணை கமிஷனர், மங்கையர்க்கரசி கூறியதாவது: சுகவனேஸ்வரர் கோவில், முதல் நிலை கோவில் என்பதால், முழு அதிகாரமும், கோவில் உதவி கமிஷனருக்கே உள்ளது. சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து, பயோ மெட்ரிக் கருவியை வைத்து கொள்ளுமாறு, வாய் மொழி உத்தரவு வழங்கியதாக, அவர் தெரிவித்தார். மேற்கொண்டு விவரங்களுக்கு, அவரிடம் கேட்டு கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார். சுகவனேஸ்வரர் கோவில், உதவி கமிஷனர் பாஸ்கரன், வெளியூர் சென்றுள்ளதால், இந்திராவிடம் (பொறுப்பு அலுவலர்) கேட்ட போது, அவர் கூறியதாவது: இரு நாட்களுக்கு முன்பே, உதவி கமிஷனர், இந்த கருவியை வைக்குமாறு கூறியதால் தான், அதை வைக்க அனுமதித்தோம். தினமும், இந்த இயந்திரத்தில், எங்கள் வருகை பதிவை, நாங்கள் பதிவு செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.