பதிவு செய்த நாள்
27
ஏப்
2024
03:04
கோவை;குடும்ப பிணைப்பு ஏற்பட, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவுகளோடு இணைந்து, உணவு பரிமாறி உட்கொள்ள வேண்டும், என்று திருவாரூர் ஸ்ரீ சங்கர நாராயண பீடம் குரு மஹா சன்னிதானம் ஸ்ரீல ஸ்ரீ குரு சிவாஜி சந்தோஷ் சுவாமிகள் கூறினார்.
கோவைக்கு வருகை தந்த அவர், ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் நடைபெற்ற மஹா ருத்ர யக்ஞத்தில், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மாலை 4:00 மணிக்கு, ராமநாதபுரம் ஒலம்பஸிலுள்ள நரசிங்க பெருமாள் கோவிலில், லட்சுமி நரசிம்ம ஹோமம் நடந்தது. வேதவிற்பன்னர்கள் புடைசூழ வேதபாராயணம் நடந்தது. சுவாமிக்கு சகல திரவிய அபிஷே கம், திருமஞ்சனம், அர்ச்சனை மற்றும் சிறப்பு அன்னதானம் நடந்தது. பக்தர்களுக்கு, ஓம் நமோ நாராயணாய என்ற, திருமந்திரம் உபதேசிக்கப்பட்டது. ஓம் நமோ நாராயணாயான என்று, 18 முறை பக்தர்கள் ஜெபித்தனர். ஜாதி, மத பேதமின்றி திருமந்திர உபதேசம் அனைவருக்கும், அனுக்கிரஹம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமிகள் பேசியதாவது: தற்போதுள்ள குடும்ப அமைப்பில், பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பரம்பரை பெருமை, இறைபணி, தர்மகாரியங்கள் மற்றும் மக்களுக்கு ஆற்ற வேண்டியவற்றை, குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். பிள்ளைகள் குடும்பத்தின் மாண்பை தெரிந்து சிறந்த குடிமகனாக, நல்ல மனோதிடத்துடன் வாழ வேண்டும். குடும்ப பிணைப்பு ஏற்பட, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவுகளோடு இணைந்து, உணவு பரிமாறி உட்கொள்ள வேண்டும். மொபைல் போனை தவிர்த்து, ஒருவருக்கொருவர் அன்றைய தினம் நடந்த, நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்வது அவசியம். பெற்றோரும், குழந்தைகளும் நல்ல விஷயங்களை கலந்துரையாடி நேர்மறையான எண்ணத்தோடு உறக்கத்துக்கு செல்ல வேண்டும். அப்போது, அதிகாலை நல்ல பொழுதாக அமையும். இவ்வாறு, சுவாமிகள் பேசினார்.