பதிவு செய்த நாள்
27
ஏப்
2024
02:04
பல்லடம்; ஐந்து ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், அடையாள அட்டை வழங்கப்பட வில்லை என, கோவில் பூசாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் வாசு கூறியதாவது: ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு கால பூஜை நடைபெறும் கோவில்களில் வேலை பார்த்து வரும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என, கடந்த ஐந்து ஆண்டுகளாக அறநிலையத் துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவின்படி, கோரிக்கையை மனுவை பரிசீலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில், கடந்த 2019ம் ஆண்டு ஆணையர் அலுவலகத்தில் நடந்த விசாரணையை தொடர்ந்து, ஒரு கால பூஜை திட்டம் மற்றும் துறையின் கீழ் வரும் கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு, செயல் அலுவலர்கள் அல்லது தக்கார் நிலையில் உள்ள சரக ஆய்வாளர் மூலம் அடையாள அட்டை வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்தும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை. மேலும், இது போன்ற உத்தரவை தங்களுக்கு வரவில்லை என, செயல் அலுவலர்களும், சரக ஆய்வாளர்களும் கூறுகின்றனர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு நல வாரியம் மூலம் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. ஆனால், துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கால பூஜை திட்ட கோவில் பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு ஐந்து ஆண்டுகளாகியும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை. கோவில்களில் வேலை பார்க்கும் பூசாரிகள், சம்பந்தப்பட்ட கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகள் தான் என்பதை உறுதி செய்ய அடையாள அட்டை அவசியம் என்பது சொல்லத் தேவையில்லை. எனவே, மேலும் தாமதம் ஏற்படுத்தாமல், ஒரு கால பூஜை கோவில்களில் வேலை பார்க்கும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.