பதிவு செய்த நாள்
29
ஏப்
2024
10:04
அழகர்கோவில்: வைகையாற்றில் இறங்கியபின் கோயிலுக்கு திரும்பும் அழகருக்கு, உடல் வலியை போக்க சுந்தரராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் பாதசேவை செய்வது வழக்கம் என கள்ளழகர் கோயில் தலைமை அர்ச்சகர் நம்பி பட்டாச்சாரியார் கூறினார்.
அவர் கூறியதாவது: அழகருக்கும், அர்ச்சகருக்கும் உள்ள நேசம் ஒரு தாய் குழந்தையை பாவிப்பது போன்றது. நீராட்டுதல், பிரசாதம் வழங்குதல் போல ஒரு தோழராக இருந்து அவருக்கு பாதசேவை செய்கிறோம். அழகர் மலையில் இருந்து புறப்பட்டு வைகையாற்றில் இறங்கி, திரளான பக்தர்களின் தீர்த்தவாரியில் நனைந்து, மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் வழங்கி, தசாவதார நிகழ்வில் கலந்து கொள்வதுடன், பூப்பல்லக்கில் மலைக்கு திரும்புவார். அப்போது அவரது உடல், பாதங்கள் அசதியாக இருக்கும். அதற்காக சுவாமியின் தோழராக இருந்து நாங்கள் இந்த சேவையை செய்கிறோம். முன்பெல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்களின் பாதங்களை, அவர்களின் பிள்ளைகள், பேரன், பேத்திகள் இதமாக பிடித்து விடுவது வழக்கம். நம்மை காக்கும் கடவுளுக்கு மாலை, அணிகலன்கள், பட்டு ஆடைகள், பிரசாதம் போன்றவற்றை எந்த நம்பிக்கையில் படைக்கிறோமோ, அதே நம்பிக்கையில் இந்த பணிவிடையையும் செய்கிறோம். அதை சுவாமி ஏற்றுக்கொள்வது போலஇதையும் ஏற்றுக்கொள்வார் என்பது நம்பிக்கை. ஒரு அர்ச்சகர் கடவுளுக்கு நவரசங்களுடன் சேவை செய்ய வேண்டும். அவற்றில் இதுவும் ஒன்று. அந்தச் சேவையை வம்சாவழியாக நாங்கள் செய்து வருகிறோம் என்றார்.