திரௌபதி அம்மன் கோயில் தேரை தோள்களில் சுமந்த வந்த 400 பேர்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2024 01:04
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த வீரப்பாண்டி திரவுபதி அம்மன் கோவில் சித்திரை வசந்த விழாவில் பக்தர்கள் பிரம்மாண்ட தூக்கு தேரை தோளில் சுமந்து சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டியில் பழமையான திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி பாரதக்கதை, சுவாமி வீதிஉலா நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட கரகம் வீதி உலா துவங்கியது. 7 டன் எடையுடன், சுமார் 40 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான தூக்குத்தேரில் திரௌபதி சமேத அர்ஜுனன், கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, நானூருக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விரதமிருந்து தேரை தோளில் சுமந்து மூன்று கிலோமீட்டர் சுற்றளவு உள்ள கிராமத்தை வலம் வந்தனர். இன்று காலை 10:30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு தேர் மீண்டும் வீதி உலா துவங்கியது. அரண்மனை வீதியை வந்தடைந்ததும் தேர் சவாரி செய்யும் வைபவம் நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் அர்ஜுனன் தபசு, விலாட பருவ மாடுவலைத்தல், அரவான் களபலி என பாரத போர் காட்சிகள் தத்ரூபமாக அரங்கேற்றப்பட்டது. மாலை தேர் நிலையை அடைந்தவுடன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் தீமிதி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலம்பம், மேளதாளத்துடன் ஏழு டன் எடை கொண்ட தூக்குத்தேரை பக்தர்கள் தோளில் சுமந்து கொண்டு செல்லும்பொழுது, தேர் சிறு அசைவின்றி கோவிந்தா கோஷத்துடன் வீதி உலா வந்த காட்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் இருந்தும் பக்தர்கள் திரண்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.