பதிவு செய்த நாள்
14
மே
2024
11:05
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, முகூர்த்த காய்உடைப்புடன் நேற்று துவங்கியது.
பொள்ளாச்சி அருகே, சூலக்கல் மாரியம்மன் கோவிலில்திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, 9:30 மணிக்கு சூலக்கல் ஆற்றில் இருந்து மூங்கில் கம்பம், கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. ஆற்றுப்பகுதியில் மூங்கில் மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மலரால் அலங்கரித்து, மேள, தாளத்துடன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் மூங்கில், மூன்றாக உடைக்கப்பட்டது. அதன்பின், முகூர்த்த காய் உடைத்து, உடைக்கப்பட்ட மூங்கிலில் நவதானியங்கள் உள்ளிட்டவை கட்டி, அம்மனிடம் வைக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில், புரவிபாளையம் ஜமீன் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோப்பண்ண மன்றாடியார், கோவில் செயல் அலுவலர் (பொ) சீனிவாச சம்பத் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று, காலை, 9:00 மணிக்கு வேல் புறப்பாடு, இரவு, 9:00 மணிக்கு பூச்சாட்டு விழா நடக்கிறது.வரும், 20ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கிராமசாந்தி, வாஸ்து சாந்தியும், 21ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கம்பம் நாட்டு விழா, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 22ம் தேதி காலை, 9:00 மணிக்கு கொடியேற்றம், இரவு, 8:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 23ம் தேதி முதல், 28ம் தேதி வரை தினமும் காலை, 9:00 மணி மற்றும் இரவு, 8:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா; இரவு, 9:00 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 29ம் தேதி காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு, பொங்கல் வைத்தல், இரவு, 7:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, 30ம் தேதி மாலை, 4:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 31ம் தேதி மாலை, 4:30 மணிக்கு இரண்டாம் நாள் தேரோட்டமும், ஜூன் 1ம் தேதி மாலை, மூன்றாம் நாள் தேரோட்டமும் நடக்கிறது. ஜூன் 2ம் தேதி மதியம், மஹா அபிேஷகமும் நடக்கிறது.