பதிவு செய்த நாள்
15
மே
2024
11:05
திருப்பூர்;அவிநாசி திருத்தலம், காசியுடன் நேரடி தொடர்பில் இருந்து அருளுரையும் புண்ணிய பூமி என்பதை பக்தர்கள் அறிவர். வைப்பு தலமாகிய திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் மூலவராகிய லிங்கத்திரு மேனியும், காசியில் இருந்து எடுத்து வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
குலோத்துங்கன் செங்கண்ணன் என்ற மன்னரால் கட்டப்பட்ட இக்கோவில், மீண்டும் 1936ல் திருப்பணி செய்து, புதிதாக அமைக்கப்பட்டு, 1948ல் கும்பாபிேஷக விழா நடந்துள்ளது. திப்புசுல்தான் காலத்திலேயே, இத்தலத்துக்கு பல்வேறு நிலக்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன. கோவிலை போலவே, ஸ்ரீவிஸ்வேஸ்வரர் மற்றும் ஸ்ரீவீரராகவர் திருத்தேர்களும் மிகவும் பழமையானவை. திருப்பூர் நகரின் அடையாளமாகவும், இரண்டு கண்களாகவும் விளங்கும், இக்கோவில்களில், வைகாசி விசாகத்தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. சிவனடியார்களின் கைலாய வாத்தியம், வைணவர்களின் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களுடன், தேரோட்டம் விமரிசையாக நடக்கும். இந்தாண்டு தேர்த்திருவிழா, வரும், 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தேர்களுக்கு சாரம் கட்டும் பணி நடந்து வரும் நிலையில், வரும் 19ம் தேதி காலை, 8:30 மணிக்கு, தேர்களுக்கு கலசம் பொருந்தும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. தேரோட்ட திருவிழாவில், ஒவ்வொரு நாளும், சுவாமிகளின் திருவீதியுலா களைகட்டப்போகிறது.
அதிகார நந்தி வாகனம், கற்பக விருட்சம், யாழி வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், ராவண வாகனம், பல்லக்கு, குதிரை வாகனம், ஆதிசேஷ வாகனம், கருட வாகனம் என, பஞ்சவர்ண குடை பிடிக்க, பந்த தீப ஒளியில், மங்கள இசை முழங்க, உற்சவர் திருவீதியுலா சிறப்புடன் நடைபெற உள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவீரராகவப்பெருமாள் காலை மற்றும் மாலை என, இருவேளைகளிலும் தேர்வீதிகளில், திருவீதியுலா வந்து அருள்பாலிக்க உள்ளனர். ஈஸ்வரன் கோவிலில், காலை நேரம், ஆனந்தவல்லி சமேத சந்திரசேகரரும், மாலையில் சோமாஸ்கந்தரும் திருவீதியுலா வந்து அருள்பாலிக்க உள்ளனர்.
இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் சரவணபவன் கூறியதாவது: வைகாசி விசாகத்தேர்த்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். முதல்கட்டமாக, மேயர் தினேஷ்குமார் முன்னிலையில், கட்டளைதாரர், பக்தர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. நாளை (இன்று) தாலுகா அலுவலகத்தில், மாலை, 3:00 மணிக்கு, துறைவாரியான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. வழக்கம் போல், சிறப்பான கலை நிகழ்ச்சிகளுடன், தேர்த்திருவிழா கொண்டாடப்படும். பக்தர்கள், தினமும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அருள்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.