நாகர்கோவில்; வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. வரும் 19 வரை பூஜைகள் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் வைகாசி முதல் தேதி நேற்று பிறந்த நிலையில் கேரளாவில் இன்று வைகாசி முதல் தேதி ஆகும். இதற்காக சபரிமலை நடை நேற்று மாலை 5:00 மணிக்கு திறந்தது. மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். அதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி மகேஷ் மோகனரரு ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. எல்லா நாட்களிலும் காலையில் உஷ பூஜை, உச்ச பூஜை, களபாபிஷேகம், மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம் , இரவு அத்தாழபூஜை ஆகியவற்றுடன் உதயாஸ்தமன பூஜை, படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 19 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.