பதிவு செய்த நாள்
24
மே
2024
04:05
மேட்டுப்பாளையம்; காரமடை அருகே உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் நடந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி, தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
காரமடை அருகே வெள்ளியங்காடு ஊரில், மிகவும் பழமை வாய்ந்த பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் குண்டம் விழா கடந்த, 19ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கியது. 20ம் தேதி அம்மன் அழைப்பும், கம்பம் நடுதலும், சக்தி கரகம் அழைத்து வரப்பட்டது. 21ம் தேதி இரவு வள்ளாளன் கோட்டை சூரசம்ஹாரம் நடைபெற்றது. கடந்த, 22ம் தேதி வெள்ளியங்காடு ஊரிலிருந்து அம்மன் சுவாமியை, சிறப்பு அலங்காரத்தில் கோவிலுக்கு அழைத்து வந்தனர். கோவில் தலைமை பூசாரி வேலுசாமி குண்டத்திற்கு பூஜை செய்து, முதலில் இறங்கினார். அதைத் தொடர்ந்து உதவி பூசாரிகள், ஆண், பெண், சிறுவர், சிறுமியர் என ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர். மாலையில் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்தனர். மறுநாள் காலை அபிஷேக ஆராதனையும், மஞ்சள் நீராட்டும், அம்மன் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. இக்குண்டம் விழாவில் வெள்ளியங்காடு, கெம்மாரம்பாளையம், அட்டப்பாடி, முத்துக்கல்லூர், சுண்டக்கொரை, ஆதிமாதையனூர், காளியூர், பனப்பாளையம் புதூர், உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் செயல் அலுவலர் சபரீஷ்வரி, வெள்ளியங்காடு, கெம்மாரம்பாளையம், அட்டப்பாடி ஆகிய கிராம ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.