பதிவு செய்த நாள்
24
மே
2024
04:05
திருப்பூர்; திருப்பூர் சிவனடியார்கள் திருக்கூட்டம், அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிவனடியார்கள் பங்கேற்ற மகேஸ்வர பூஜை நேற்று நடந்தது.
கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமிகள், செஞ்சேரி திருநாவுக்கரசு மடத்தின் தலைவர் முத்து சிவராமசாமி அடிகளார் முன்னிலையில், ஒவ்வொரு திருமுறையில் இருந்து ஒரு பாடல் வீதம், பனிரெண்டு திருமுறைகளில் இருந்து பதிகங்கள் விண்ணப்பம் செய்து, இறைவழிபாடு செய்யப்பட்டது. திருக்கயிலாய வாத்திய இசையுடன், மகாதீபாராதனை நடந்தது.
பக்தியை வளர்க்கணும்!
கவுமார மடாலயம், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் பேசுகையில், அனைவரும் வழிபாட்டுக்கு வரவேண்டும்; ஒவ்வொரு கோவில்களில் வழிபாடு சிறப்பாக நடக்க வேண்டும். வடமாநிலங்களில் இருப்பது தீர்த்த வழிபாடு. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற வரிசையில், தென்னகத்தில் மூர்த்தி தலங்கள் நிறைந்துள்ளன. பழமையான கோவில்களை புனரமைத்து, பாதுகாத்து, பக்தியை வளர்க்க வேண்டும்; மக்களுக்கான அறப்பணியை செய்ய வேண்டும், என்றார். கூனம்பட்டி திருமடம் ஸ்ரீநடராஜ சுவாமிகள் பேசுகையில்,நால்வர் காட்டிய வழி என்று கூறுவது போல், நால்வர் பெருமக்கள் இல்லையெனில், இன்று ஆன்மிகத்துடன் வாழ முடியாது. அவர்கள் வாழ்ந்து காட்டிய வழியை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறோம். குடும்ப தலைவர், மனைவி, குழந்தைகள் என, மக்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை பெரியபுராணம் விளக்குகிறது. கலியுகத்தில், பக்தியால் மட்டுமே முக்தி கிடைக்கும். சிவன் மீது பக்தி செலுத்துவது போல், சிவனடியார்கள் மீதும் பக்தி செலுத்துவதும் சிறப்பு வாய்ந்தது, என்றார். தொடர்ந்து அப்பரடிப்பொடி விஜயமங்கலம் சொக்கலிங்கம் ஐயா சிறப்புரை ஆற்றினார். மகேஸ்வர பூஜையை தொடர்ந்து, முக்கனியுடன் விருந்து அளிக்கப்பட்டது.
சாதனையாளர் விருது
நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற அறிலையத்துறை இணை கமிஷனர் நடராஜன், ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், மடவிளாகம் ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் முன்னாள் தலைவர் தங்கமுத்து, அவிநாசி சைவர் திருமடம் திருமூர்த்தி, பெருந்துறை விஜயகுமார் ஆகியோருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.