பதிவு செய்த நாள்
27
மே
2024
10:05
திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாகத் தேர்த்திருவிழாவின், 10வது நாளான நேற்று, தெப்பத்திருவிழா நடந்தது; நம்பெருமாள் தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலித்தார்.
ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாகத்தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. பத்தாம் நாளான நேற்று, தெப்பத்திருவிழா நடந்தது. காலை, உற்சவமூர்த்திகள் தேர்வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர். விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அபிேஷக மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. வீரராகவப்பெருமாள் கோவிலில், மாலை, 5:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீரரராகவப்பெருமாள் எழுந்தருளினார். கோவில் வளாகத்தை சுற்றிவந்த உற்சவ மூர்த்திகள், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வீற்றிருந்து, தெப்பக்குளத்தின் மையத்தில் உள்ள நீராழி மண்டபத்தை மூன்று முறை சுற்றி வந்து அருள்பாலித்தனர். மகா தீபா ராதனையை தொடர்ந்து மீண்டும் கோவிலை சென்றடைந்தனர். இன்று காலை, 10:00 மணிக்கு விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஸ்ரீநடராஜர் - சிவகாமியம்மன் உற்சவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் தேர்வீதி புறப்பாடு நிகழ்ச்சி நடக்க உள்ளது. நாளை மஞ்சள் நீராட்டு விழா - மலர் பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
திருவிழாகலை நிகழ்ச்சிகள்; தேர்த்திருவிழாவையொட்டி, ஸ்பாண்ட டான்ஸ் கம்பெனியின், பரதநாட்டிய நிகழ்ச்சி நேற்று நடந்தது. இன்று, சிறப்பு பட்டிமன்றமும், நாளை மேஸ்ட்ரோ தெய்வீக பாடல் நிகழ்ச்சியும், நாளை மறுநாள், சண்முகாலயா இசை நாட்டியப்பள்ளி மாணவியின், பக்தி பண்ணிசை மற்றும் நாட்டியாஞ்சலி; 30ம் தேதி ஸ்ரீஅன்பு நாட்டிய கலாேஷத்ரா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. ஸ்ரீவாரி டிரஸ்ட், திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை,ஸ்ரீஆதீஸ்வர் டிரஸ்ட், சேக்கிழார் புனிதர் பேரவை நிர்வாகிகளும், பக்தர்களும் கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.