பதிவு செய்த நாள்
27
மே
2024
12:05
சிவகிரி; சிவகிரி திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா மஞ்சள் நீராட்டு விழாவில், முத்தால ராவுத்தர் பீடத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது.
சிவகிரி திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 24ம் தேதி பூக்குழி திருவிழா நடந்தது. 10ம் நாள் திருவிழாவன்று, காப்பு கட்டும் பக்தர்கள் சங்கத்தின் சார்பாக மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.
தொடர்ந்து ஓய்வு பெற்ற குடிநீர் வடிகால் அதிகாரி ராமர் குடும்பத்தினர் சார்பில் அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியின் போது திரவுபதி அம்மன், கிருஷ்ணர், அர்ஜுனர் ஆகியோருக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. இரவில் இந்து, முஸ்லிம் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள முத்தால ராவுத்தர் பீடத்தில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த நிர்வாகிகள் அப்துல் கரீம், ஹஜரத் ஆதம், மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள், பணியாளர்கள் உட்பட திரளானோர் பிரார்த்தனை செய்தனர். பீடத்திற்கு சிறப்பு பூஜைகள், படையல் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தக்கார் (பொ) தங்கம், நிர்வாக அலுவலர் கணேஷ் குமார், பணியாளர் குமார், காப்பு கட்டும் பக்தர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்கோடி, செயலாளர் மாரியப்பன், பொருளாளர் பாண்டியராஜன், தண்டல் காளிமுத்து, அனைத்து மண்டகபடி த்தாரர்கள், ஆலய பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.