பழுதான சாலையை சீரமைத்த கோவில் நிர்வாகம் பொதுமக்கள்..!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2024 12:05
பந்தலூர்; பந்தலூர் பஜாரில் இருந்து நெல்லியாலம் நகராட்சி அலுவலக சாலை வழியாக, நீதிமன்றம், அங்கன்வாடி, அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் முருகன் கோவில் செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் நீதிமன்றம் அருகே தாழ்வான சாலைப் பகுதியில், பழுது ஏற்பட்டு பல மாதங்கள் ஆகிறது. பழுதடைந்த சாலை பகுதி தாழ்வாக உள்ளதால், வாகனங்கள் சென்று திரும்பி வரும்போது வர முடியாத சூழல் ஏற்பட்டதால், வாகனங்கள் வந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அங்கன்வாடி குழந்தைகளை பெற்றோர்கள் நடந்தே அங்கன்வாடி மையத்திற்கு கொண்டு சென்று விட வேண்டும். பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்ல வரும் வாகனம், மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டு மாணவர்களை வரிசையாக அழைத்து வந்து வாகனத்தில்வாகனத்தில் ஏற்றி அழைத்துச் செல்கின்றனர். மேலும் வயோதிகர்கள் மற்றும் நோயாளிகள் கோவிலுக்கு வர முடியாத நிலையில் சிரமப்பட்டு வந்தனர்.
பழுதான இந்த சாலையை சீரமைத்து தர இப்பகுதி மக்கள் நெல்லியாலம் நகராட்சி நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் நகராட்சி கண்டு கொள்ளாத நிலையில், வேறு வழி இன்றி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில், பொதுமக்கள் இணைந்து சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் வாகன வசதி இன்றி பல்வேறு சிரமப்பட்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பயன் ஏற்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக டிப்பர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்காமல் சிறு வாகனங்களை இயக்கினால் சாலைப் பொழுது ஏற்படாமல் பாதுகாக்கப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.