பதிவு செய்த நாள்
28
மே
2024
05:05
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பிரிவில் உள்ள செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில் பாலமுருகன் சிலை, திடீரென கண் திறந்ததாக கூறி, பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பிரிவில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. சுமார், 20 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவில் நிர்மாணம் செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில் பிரதான தெய்வமாக செல்வவிநாயகர் அருள்பாலித்து வருகிறார். கோவில் வளாகத்தில் கன்னி மூல கணபதி, கல்யாண முருகர், பாலமுருகன், வீர ஆஞ்சநேயர், நவகிரக சன்னதிகள் உள்ளன. தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். நேற்று இரவு கோவில் அர்ச்சகர் சுப்பிரமணியம், பூஜையை முடித்துவிட்டு, கதவை அடைக்கும் போது கோவில் வளாகத்தில் இருந்த பாலமுருகன் சிலை, கண் திறந்து இருப்பது போல தோற்றம் இருந்தது. உடனடியாக கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அனைவரும் கோவில் வளாகத்துக்கு வந்து முருகனை வழிபட்டனர். தகவல் தெரிந்து, திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, இறைவனை வழிபட்டு செல்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.