கருமத்தம்பட்டி; கோதபாளையம் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் ஆண்டு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கருமத்தம்பட்டி அடுத்த கோத பாளையம் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் பழமையானது. இங்கு, 12 வது ஆண்டு விழாவை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் இருந்து பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்தனர். நேற்று முன்தினம் காலை புனித நீர் கலசங்கள் வைக்கப்பட்டு ஹோமம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், தேன் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. புனித நீர் அபிஷேகத்துக்கு பின் அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். குங்குமம் மற்றும் பூக்களால், திருவிளக்குக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். கோவில் கமிட்டியினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.