விவசாயம் செழிக்க வேண்டி அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2024 11:05
பழையனூர்; பழையனூர் அருகே மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி குதிரை எடுப்பு திருவிழா நடந்தது. ஓடாத்தூர் ஸ்ரீசிவ செண்பக தண்ணாயிரமுடைய அய்யனார் கோயிலில் வருடம் தோறும் வைகாசி மாதம் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி குதிரை எடுப்பு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா கடந்த 21ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஊரை காவல் காக்கும் அய்யனாருக்கு குதிரை செய்து வழங்குவது வழக்கம். வேளார் தெருவில் குதிரைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டிய பின் விரைவில் திருமணம் நடைபெற வேண்டி இளைஞர்கள் புரவிகளை சுமந்தபடி ஊர்வலமாக வந்தனர். குழந்தை வரம் வேண்டி விரதமிருந்த பெண்கள் குழந்தை பொம்மைகளை சுமந்தபடி வந்தனர். அய்யனார் கோவில் வாசலுக்கு வந்த பின் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. விரதமிருந்த பக்தர்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு கிடா வெட்டி விருந்து கொடுத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஓடாத்தூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.