பதிவு செய்த நாள்
01
ஜூன்
2024
10:06
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அடுத்துள்ள, சூலக்கல் மாரியம்மன் கோவிலில், மூன்று நாள் தேரோட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
பொள்ளாச்சி, சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 13ம் தேதி திருத்தேர் முகூர்த்தக்கால் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கோவிலில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதுடன், காலை மற்றும் இரவு நேரங்களில் அம்மன் சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சிகள் நடந்தது. கடந்த, 29ம் தேதி காலை மாவிளக்கு பொங்கல் வைத்தல் பூஜைகள் மற்றும் மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்றுமுன்தினம் தேரோட்டம் துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட, 36 அடி உயரம் உள்ள தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்திலும், 15 அடி உயரம் உள்ள தேரில் விநாயகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் மதுரைவீரன் கோவில் வீதியில் நிலை நிறுத்தப்பட்டது. நேற்று மாலை இரண்டாம் நாளான தேரோட்டம் துவங்கியது. புரவிபாளையம் ஜமீன் குடும்பத்தினர் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோப்பன்ன மன்றாடியார், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்தனர். கோவில் பின் பகுதியில் தேரானது நிலை நிறுத்தப்பட்டது. இன்று மாலை மூன்றாம் நாள் தேரோட்டம் துவங்கி கோவிலுக்கு வந்து நிலை நிறுத்தப்படும். அதன்பின் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, மஹா அபிஷேகம் நடக்கிறது.