துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நேற்று மாலை திடீரென ஒருமணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால், கோவில்பட்டி நகரின் பிரதான சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதேபோல, செண்பகவல்லி அம்மன் சமேத- பூவனநாத சுவாமி திருக்கோவிலில், பூவனநாத சுவாமி சன்னிதிக்கு அருகே உள்ள பிரகாரத்திலும் மழை நீர் தேங்கியது. கோவில் பணியாளர்கள் உடனடியாக தண்ணீரை வெளியேற்ற முயற்சி செய்தனர். இருப்பினும், உடனடியாக அது நிறைவேறவில்லை. இதற்கிடையே, துர்கை அம்மன் சன்னதிக்கு எதிரே தண்ணீர் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த சிறிய வழியில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மற்றும் குப்பைகள் அடைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அடைப்புகளை கோவில் பணியாளர்கள் அகற்றினர். சிறிது நேரத்தில் கோவில் பிரகாரத்தில் தேங்கியிருந்த மழை நீர் முழுதுமாக வெளியேறியது.