செண்பகவல்லியம்மன் கோயில் ஐப்பசி தேரோட்டம் கோலாகலகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2012 11:11
கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு பெற்ற சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி பக்தர்களிடம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தாண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த அக்.30ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர் முறையில் சிறப்பு பூஜைகளும், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்பாள் திருவீதி உலாவும் நடந்தது. இந்நிலையில் திருக்கல்யாண திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியையொட்டி அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு, திருவனந்தள் பூஜை நடந்தது. தொடர்ந்து செண்பகவல்லி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதையடுத்து காலை சுமார் 9 மணியளவில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருத்தேரில் எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து மாலையில் சிறப்பு பூஜைகளையடுத்து திருத்தேரானது நான்கு ரதவீதிகளில் வலம் வந்தது. இதில் திருத்தேரை கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர்ராஜூ வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். இதையடுத்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஓம்சக்தி பராசக்தி பக்த கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். மேலும் தேர்த்தடி முறைதாரர்களான சங்கரலிங்கபுரம் பாலமுருகன் குழுவினர் தேர்த்தடி போட்டனர். விழாவில் கோவில்பட்டி ஆர்டிஓ சுதர்சன், டிஎஸ்பி ராஜேந்திரன், செண்பகவல்லியம்மன் கோயில் நிர்வாக அலுவலர் கசன்காத்தபெருமாள், முன்னாள் திருப்பணிக்குழு தலைவர் நாகஜோதி, முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் திருப்பதிராஜா, வணிக வைசிய சங்க தலைவர் குருசாமி, செயலாளர் பாலமுருகன், பொருளாளர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உள்பட கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.