திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அடுத்தாண்டு கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2024 10:06
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2025ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இக் கோயிலில் 2011, ஜூன் 11 ல் கும்பாபிஷேகம் நடந்தது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஆகம விதி. இதையடுத்து, குன்றத்து கோயிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த நிர்வாக முடிவு செய்துள்ளது. கோயில் வளாகத்திலுள்ள லட்சுமி தீர்த்த குளம் சுற்றுச்சுவர்கள் சேதமடைந்து வந்தது. அங்கு பணிகள் நிறைவடையும் தறுவாயில் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக பணிகளைத் துவக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ரூ. 6.50 கோடியில் லட்சுமி தீர்த்த குளம் பழமை மாறாமல் சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் குறித்த விபரங்கள் தயார் செய்து மண்டல குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அக்குழு அனுமதி அளித்ததும், மாநில குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும். அக்குழு அனுமதி அளித்தவுடன் கும்பாபிஷேக பணிகள் துவங்கும். 2025ல் கும்பாபிஷேகம் நடைபெற வாய்ப்புகள் உள்ளன என கோயில் துணை கமிஷனர் சுரேஷ் தெரிவித்தார்.