பதிவு செய்த நாள்
15
ஜூன்
2024
10:06
ஸ்ரீபெரும்புதுார்; ஸ்ரீபெரும்புதுாரில், ராமானுஜர் கோவில் அருகில் உள்ள, ஸ்ரீவிநய ஆஞ்சநேயர் கோவிலில் தேங்கும் கழிவுநீரால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
வைணவ மகான் ராமானுஜர் அவதார தலமான ஸ்ரீபெரும்புதுாரில், ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து ராமானுஜரை வழிபட்டு செல்கின்றனர். ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும், 10 நாள் ராமானுஜர் உற்சவத்தில், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ராமானுஜர் எழுந்தருளும் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை வடம்பிடித்து இழுத்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், ராமானுஜர் கோவில் செல்லும் சன்னிதி தெருவில், ஸ்ரீவினய ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
ராமானுஜர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், முதலில், ஆஞ்சநேயரை வழிபட்டு, பின்னர் ராமானுஜரை வழிப்பட்டு செல்வது வழக்கம். ராமானுஜர் கோவில் கட்டுபாட்டில் உள்ள இந்த கோவில், தற்போது பராமரிப்பு இன்றி உள்ளது. ஆஞ்சநேயர் கோவில் சாலையின் உயரத்தைவிட பள்ளத்தில் இருப்பதால், அப்பகுதியில் வெளியேறும் கழிவுநீர், உயரம் குறைவாக உள்ள, ஆஞ்சநேயர் கோவிலில் தேங்குகிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பல வாரங்களாக தேங்கும் கழிவுநீரால், கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது.
இது குறித்து பக்தர் ஒருவர் கூறியதாவது: நான்கு மாதங்களுக்கு முன், ராமானுஜர் கோவில் சுற்றியுள்ள சாலைகளில் அவசர கதியில் தார் சாலை போடப்பட்டது. பழைய சாலையை அகற்றாமலேயே, அதற்கு மேல் மீண்டும் தார் ஊற்றி புதிய சாலை போடப்பட்டது. இதனால், சாலையின் உயரம் மேலும் அதிகரித்தது. ஆஞ்சநேயர் கோவில் சாலையைவிட உயரம் குறைவாக பள்ளத்தில் போனது. தற்போது, மழை பெய்யும் போது, மழைநீருடன் கழிவுநீர் கலந்து, கோவிலின் உள்ளே இரண்டு அடிவரை தேங்கி நிற்கிறது. பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், கழிவுநீரில் நின்று வழிபட்டு செல்லும் அவலநிலை உள்ளது. கோவில் அதிகாரிகள் மற்றும் வார்டு உறுப்பினர் அதே தெருவில் இருந்தும், இந்த கோவிலை யாரும் கண்டுகொள்ளவில்லை என, பக்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே, கோவிலில் தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றி, கழிவுநீர் வருவதை முழுமையாக தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.