பதிவு செய்த நாள்
17
ஜூன்
2024
11:06
அவிநாசி; திருமுருகன்பூண்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பூமி நீளா ஸமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவிலில், மஹா கும்பாபிஷேகம், கோலாகலமாக நடைபெற்றது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேக விழா கடந்த, 14ம் தேதி காலை முதற்கால யாகபூஜையுடன் துவங்கியது. நேற்று அதிகாலை, நிறைவு கால யாகசாலை பூஜையை தொடர்ந்து, காலை, 7:05 மணிக்கு மூலவர் விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரண்டிருந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள், ‘ஓம் நமோ நாராயணா... கோவிந்தா, கோபாலா’ என கோஷமிட்டு, பெருமாளை வழிபட்டனர்.
கும்பாபிஷேகத்தை திருவெள்ளறை மேலத்திரு மாளிகை சவும்ய நாராயணாச்சார்ய சுவாமி நடத்தி வைத்தார். பேரூர் ஆதீனம் மருதாசல அடிகள், சரவணம்பட்டி கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமி, திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமி, கூனம்பட்டி ஆதீனம் ராஜசரவண மாணிக்க சுவாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதன்பின, திருமுருகநாத சுவாமி அறக்கட்டளை சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் திருக்கல்யாண உற்சவம், பெருமாள் திருவீதி உலாவும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் விமலா, அருள்மிகு திருமுருகநாத ஸ்வாமி அறக்கட்டளை திருப்பணி குழு, ருத்ராபிஷேக குழு, சேக்கிழார் புனிதர் பேரவை, அறங்காவலர் குழுவினர் மற்றும் பெருமாள் கோவில் பட்டாச்சாரியார்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.