பதிவு செய்த நாள்
17
ஜூன்
2024
05:06
சூலூர்; "குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால், வாழ்க்கை இனிமையாக இருக்கும்,"என, ஆன்மீக சொற்பொழிவாளர் கிருஷ்ண ஜகந்நாதன் பேசினார்.
முத்துக்கவுண்டன் புதூர் ஸ்ரீ விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், மாதாந்திர விழிப்புணர்வு சொற்பொழிவு நிகழ்ச்சி விவேகானந்தர் அரங்கத்தில் நடந்தது. இயக்க தலைவர் சம்பத்குமார் மற்றும் உற்ப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். குடும்பம் ஒரு கோவில் என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவாளர் கிருஷ்ண ஜகந்நாதன் பேசியதாவது: அறம், பொருள், இன்பம், வீடு என்பது நம் முன்னோர்கள் வாக்கு. அற வழியில் பொருளை சேர்த்தால், இன்பத்துடன் வீடு பேறை அடையலாம். குடும்பம் ஒரு கோவிலை போன்றது. உயர்ந்த ஆன்மீக சிந்தனைகளால், எண்ணங்களால் கோவில்கள் உருவாக்கப்பட்டன. அதேபோல், சிறந்த குடும்பத்தை உருவாக்க வேண்டும். நவகிரகங்கள் குடும்ப அமைப்புக்கு சிறந்த உதாரணமாகும். சமுதாயத்தின் கட்டுப்பாடுகளை பின்பற்றி, குடும்பத்தை வழி நடத்த வேண்டும். குடும்ப அமைப்பே நமது நாட்டின் பலமாகும். மேலை நாடுகளில் யாருக்கு யார் என்ன உறவு என்பதே இல்லாத நிலை உள்ளது. அதனால், அந்நாடுகளின் இன்றைய நிலை பரிதாபமாக உள்ளது. பள்ளிகளில் படிப்பை மட்டும் போதிப்பார்கள். நல் ஒழுக்கங்கள், தேச பக்தி, சமுதாய சிந்தனை, தேசத்தின் வரலாறு குறித்து குழந்தைகளுக்கு நாம் தான் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆன்மீக தலங்களுக்கு குடும்பத்துடன் செல்ல வேண்டும். ஆன்மீக சொற்பொழிவுகளுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டும். உணவு உண்ணும் போது அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ண வேண்டும். உறவினர்கள் வீட்டில் நடக்கும் விஷேசங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டும். உறவு முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் மற்ற உறுப்பினர்களின் கருத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டும். விட்டுக்கொடுத்தும், அனுசரித்தும் வாழ்ந்தால், வாழ்க்கை இனிமையாக இருக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.