திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழாவின் 4ம் நாளில் சுவாமி, அம்பாள் வீதி உலாநடந்தது. பாலசுந்தரம் குழுவினரின் பட்டினத்தார் சரித்திர புராண நாடகம் நடந்தது
நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்ட திருவிழா 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 21ம் தேதி காலை நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாள் வீதி உலா, மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவின் 4ம் நாளான நேற்று காலை சுவாமி வெள்ளி குதிரை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் வீதி உலா நடந்தது. இரவு பஞ்ச வாத்தியங்கள் முழங்க வெள்ளி ரிஷப வாகனங்களில் சுவாமி, அம்பாள் மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்கள் வீதி உலா நடந்தது. சிறுமிகள், பெண்கள் கோலாட்டம் அடித்தனர்.
கலை நிகழ்ச்சி : நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கில் நேற்று மாலை 4 மணிக்கு திருவுருவமாமலை பன்னிருத் திருமுறை வழிபாட்டுக்குழுவின் திருமுறை ஆசிரியர் வள்ளிநாயகம் தலைமையில் திருமுறை பாராயணம், 5 மணிக்கு உஷா ஹரிஹர சுப்பிரமணியன் குழுவினரின் வாய்ப்பாட்டு நடந்தது. 6 மணிக்கு தரங் அகாடமி நாட்டியப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், இரவு 7 மணிக்கு தாளம் நடனக் கலைக்கூடம் மாணவிகளின் பரதநாட்டியம் நடந்தது. 8 மணிக்கு தமிழரசன் தியேட்டர்ஸ் வழங்கும் பாலசுந்தரம் குழுவினரின் பட்டினத்தார் சரித்திர புராண நாடகம் நடந்தது. கலைநிகழ்ச்சியை நெல்லை மயன் நிர்வாகத்தினர் வழங்கினர்.