பதிவு செய்த நாள்
18
ஜூன்
2024
12:06
பொள்ளாச்சி; ‘குருவின் பெருங்கருணையும், ஆசீர்வாதமும் இருந்தால் பேரின்பத்தை பெறலாம்,’ என, பொள்ளாச்சியில் நடந்த சத்சங்கத்தில், ரிஷிகேஷ் ஆர்ஷ வித்யா குருகுலம் ஆச்சார்யார்பூஜ்ய ஸ்ரீ சாத்சாத் கிருதாநந்த சரஸ்வதி சுவாமிகள் பேசினார். பொள்ளாச்சி ஆர்ஷ வித்யா பீடத்தில் சத்சங்கம் நிகழ்ச்சி நடந்தது. பொள்ளாச்சி ஆர்ஷ வித்யா பீடம் பூஜ்யஸ்ரீ ததேவாநந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்தார்.
ரிஷிகேஷ் ஆர்ஷ வித்யா குருகுலம் ஆச்சார்யார்பூஜ்ய ஸ்ரீ சாத்சாத் கிருதாநந்த சரஸ்வதி சுவாமிகள் பேசியதாவது: மனம், மனிதனை இயக்குகிறது; சதா, அலைந்து கொண்டே இருப்பது அதன் இயல்பு. ஐம்புலன்களை தன் கருவிகளாக வைத்து எண்ண அலைகளால் நிரம்பியுள்ளது. மனம் அமைதி பெறவே பல்வேறு பிறவிகளை எடுத்து வருகிறோம். செயலும், செயல் விளைவுகளும் கர்மாவாக பதிவு பெற்று, தேடுதலும்- கிடைத்ததில் திருப்தியின்மையுமே இதுவரை நமக்கு தொடர்ச்சியாகும். மனம் அமைதி பெரும் பொழுது, சில கேள்விகள் எழும்; அது ஆழமாக தனக்குள் பிரவேசிக்கும் கேள்விகளாக அமையும். எதற்காக வந்தோம், எங்கே போகிறோம், நான் யார், என் உடமைகள் எவை? என்ற கேள்விகள் நம் சிந்தனையை துாண்டும். இத்தகைய கேள்விகளுக்கு விடை, நமக்கு குரு உபதேசம், சத்சங்கத்தில் மட்டுமே கிடைக்கும். சத்தியமான கேள்விகளுக்கு, சத்தியத்தை உணர்ந்த நல்ல குருவாலேயே பதிலை உணர்த்த முடியும். வேதாந்தம் படிக்கணும் என்றால், கேள்வி கேட்கணும். ஜீவன் முக்திக்கு சத்சங்கமே முதல் படியாகும். சத்சங்கம், நல்ல சிந்தனை ஓட்ட தன்மையை நம்மிடம் வெளிப்படுத்தும். வேதாந்த சிரவனம் என்பது நுணுக்கமான விஷயத்தை கற்றுத் தரும். நுண்ணியதாக உள்ள ஆத்ம தத்துவத்தை உணர வழிகாட்டும். சத்சங்கத்தை விடாது பிடித்துக் கொள்ள வேண்டும். நல்லோர் வழிகாட்டுதல் இல்லாவிட்டால், வேறு பாதைக்கு அழைத்துச் சென்று, துன்பத்தில் ஆழ்த்தி விடும். ஆத்மஞானமே ஜீவன் முக்தியை அடையச் செய்யும். ஜீவ யாத்திரை நிறைவு பெற சத்சங்கத்தை நாட வேண்டும். குருவின் பெருங்கருணையும்,ஆசீர்வாதமும் இருந்தால் பேரின்பத்தை பெறலாம். இவ்வாறு, அவர் பேசினார்.