பதிவு செய்த நாள்
18
ஜூன்
2024
12:06
குடும்பத்தில், கணவர் அல்லது பிள்ளைகள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தால், வீட்டின் நிம்மதி பறிபோகும். இவர்களின் குடிப்பழக்கத்தை போக்க வேண்டுமானால், கடலோர மாவட்டத்தில் உள்ள, சனீஸ்வரரை தரிசனம் செய்யுங்கள்.
கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் புராதன கோவில்கள் உள்ளன. அபூர்வ சக்திகள் கொண்ட கோவில்கள், வெளிச்சத்துக்கு வராமல் இலை மறை காயாக உள்ளன. இத்தகைய கோவில்களில், உடுப்பியின் சனீஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். கர்நாடகாவின் தென் மாவட்டங்களுடன் ஒப்பிட்டால், கடலோர மாவட்டங்களில், சனீஸ்வர கோவில்கள் எண்ணிக்கை குறைவு.
சாளுக்கியர் பாணி: உடுப்பி, குந்தாபுராவின், அஜ்ரியின் ஜோனமனே கிராமத்தில் சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இதற்கு முன், கோவில் பிரபலமாக இல்லை. ஆனால் இங்கு குடிகொண்டுள்ள கடவுளின் அற்புத சக்தி தெரிந்த பின், பக்தர்கள் குவிகின்றனர். சனீஸ்வரரை தரிசித்து ஆசி பெறுகின்றனர். அற்புத கோவில் சாளுக்கியர் பாணியில் கட்டப்பட்டதாகும். இப்பகுதியில் வசிப்பவர் டாக்டர் அசோக். 1982ல் இவர் ஒன்றாம் வகுப்பில் படித்த போது, இவருக்கு சனீஸ்வரர் மீது ஈடுபாடு ஏற்பட்டது. அவரது படத்தை வைத்து பூஜிக்க துவங்கினார். இந்த பகுதியில் சிக்கும் சனீஸ்வரர் மீது பக்தியை விட, பயமே அதிகம் இருந்தது. எனவே அவரை பூஜிப்பது இல்லை. படத்தையும் வீட்டில் வைப்பது இல்லை. எனவே பெற்றோருக்கு தெரிந்தால், திட்டுவர் என பயந்து, தன் பாட புத்தகத்தில் சனீஸ்வரர் படத்தை மறைத்து வைத்து பூஜித்து வந்தார்.
நல்லதே நடக்கும்: இதே போன்று, எட்டாம் வகுப்பு வரை ரகசியமாக பூஜித்த அவர் மீது, சனீஸ்வரர் ஆவாஹனம் ஆனார். இதை உணர்ந்த குடும்பத்தினர், தங்களின் குலதெய்வம் மாகாளியிடம் வாக்கு கேட்ட போது, உங்கள் மகனிடம் சனீஸ்வரரின் தாக்கம் உள்ளது. அவன் மீது கடவுள் அருள் வரும். அவனுக்கு நல்லதே நடக்கும் என, கூறியதால் குடும்பத்தினர் மகிழ்ந்தனர். சிறிய குடில் கட்டி, சனீஸ்வரரை ஆராதிக்க துவங்கினர். 2002ல் கோவில் கட்டப்பட்டது. இங்கு வியாழன், சனி, ஞாயிற்று கிழமைகளில், கோவிலில் தரிசனம் இருக்கும். கோவிலின் எந்த சேவைகளுக்கும், கட்டணம் இல்லை. இங்குள்ள தர்ம சத்திரத்தில் இலவமாக திருமணங்கள் நடக்கின்றன.
பக்தர்கள் அதிகரிப்பு: இதற்கு முன் கோவில் பிரபலமாகவில்லை. ஆனால் சமீப ஆண்டுகளாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்த புண்ணிய தலத்துக்கு வந்து, தரிசனம் செய்து தீர்த்தம் அருந்தினால், மனிதனிடம் உள்ள அனைத்து கெட்ட குணங்களும் விலகி செல்லும். குறிப்பாக இக்கோவில் குடிப்பழக்கத்தை போக்கும் கோவிலாக விளங்குகிறது. கோவிலில் மற்றொரு சிறப்பும் உள்ளது. ஜாதி, வேறுபாட்டை கண்டிக்கிறது. இங்கு எந்த பாரபட்சமும் பார்க்க கூடாது. சனீஸ்வரர் தண்டிப்பார். இந்த அனுபவத்தை சந்தித்துள்ளனர். கோவிலின் மகிமையை கேள்விப்பட்டு, வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். ஒரு முறை கோவிலுக்கு வந்தால் போதும். பல சங்கடங்கள் நிவர்த்தியாகும்.