பதிவு செய்த நாள்
22
ஜூன்
2024
10:06
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், இருளில் கிரிவலப்பாதை மூழ்கியதால், கொட்டும் மழையில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலையில் உள்ள மலையையே, சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். பவுர்ணமி நாட்களில் கிரிவலம் சென்றால் மகான்கள், சித்தர்கள் மற்றும் அருணாசலேஸ்வரரின் அருளாசி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பவுர்ணமி தோறும், 14 கி.மீ., துாரமுள்ள மலையை வலம் வந்து கிரிவலம் செல்கின்றனர்.ஆனி மாத பவுர்ணமி திதி நேற்று காலை, 7:45 மணி முதல், இன்று காலை, 7:19 மணி வரை உள்ளதால், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதில், திருவண்ணாமலை அரசு கலைக்கல்லுாரி முதல், செங்கம் சந்திப்பு சாலை வரை, 3 கி.மீ துாரத்திற்கு கிரிவலப்பாதையில் உள்ள மின் விளக்குகள், கடந்த ஒரு வாரமாக சரி செய்யப்படாமல் இருட்டில் மூழ்கி இருந்த நிலையில், நேற்றும் எரியவில்லை. இந்நிலையில் நேற்று இரவு, 7:00 மணியளவில் கிரிவலப்பாதையில் மழை பெய்த நிலையில், கொட்டும் மழையில், கும்மிருட்டில் பக்தர்கள் சிரமத்துடன் கிரிவலம் சென்றனர்